7 மணி நேரம் சமூக வலைதளங்கள் முடங்கியதால் நிமிடத்துக்கு ரூ.12 கோடி இழந்த பேஸ்புக் நிறுவனம்: மொத்தம் ரூ.52 ஆயிரம் கோடி அவுட் பங்குச் சந்தை விலையும் கடும் வீழ்ச்சி

by -34 views
7 மணி நேரம் சமூக வலைதளங்கள் முடங்கியதால் நிமிடத்துக்கு ரூ.12 கோடி இழந்த பேஸ்புக் நிறுவனம்: மொத்தம் ரூ.52 ஆயிரம் கோடி அவுட் பங்குச் சந்தை விலையும் கடும் வீழ்ச்சி
7 மணி நேரம் சமூக வலைதளங்கள் முடங்கியதால் நிமிடத்துக்கு ரூ.12 கோடி இழந்த பேஸ்புக் நிறுவனம்: மொத்தம் ரூ.52 ஆயிரம் கோடி அவுட் பங்குச் சந்தை விலையும் கடும் வீழ்ச்சி

புதுடெல்லி: முக்கிய சமூகவலைதளங்களாக விளங்கும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை உலகம் முழுவதும் 7 மணி நேரம் முடங்கியதால் பேஸ்புக் நிறுவனத்துக்கு 52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பங்கு சந்தையில் அதன் மதிப்பும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. உலக மக்களின் நாடித்துடிப்பாக விளங்கும் சமூக ஊடகங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய சமூகவலைதளங்களின் சேவையில் அவ்வப்போது பிரச்னை ஏற்படுவது வழக்கம். அது உடனுக்குடன் சீர் செய்யப்படும். ஆனால், நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த சமூகவலை தளங்களின் செயலிகள் முற்றிலும் முடங்கின.

இதையடுத்து, ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சமூகவலைதளங்கள் முடங்கியுள்ளது. மன்னிக்கவும்’ என்று பேஸ்புக் நிறுவனம் கூறியிருந்தது. இதனால், பயனாளர்கள் தங்கள் குறுந்தகவல், வீடியோ, புகைப்படங்களை பகிர முடியாமல் தவித்தனர். இந்த திடீர் முடக்கத்துக்கு காரணம் தெரியவில்லை என்றாலும் ‘சைபர்’ தாக்குதலாக இருக்கலாம் என்று கருத்தப்பட்டது. பின்னர், 7 மணி நேரம் கழித்தே இந்த சமூகவலைதளங்கள் செயல்பட தொடங்கின. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர். பேஸ்புக் மூலம் பலர் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் உடனடியாக தங்கள் வேலையை தொடங்கினர்.

இது குறித்து பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுகர் பெர்க் டிவிட்டரில் வெளியிட்டுள்ள  பதிவில், ‘பேஸ்புக் உள்பட அனைத்து சமூக வலைதளங்களும் தற்போது செயல்படுகின்றன. பயனாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறேன். நீங்கள் எங்கள் சேவையை நம்புகிறீர்கள். அதற்காக நன்றி,’ என்று தெரிவித்துள்ளார். சமூக வலை தளத்தில் பேஸ்புக் 7 மணி நேரம் முடங்கியதால் அதன் நிறுவனர், மார்க் ஜுகர் பெர்க், தனது சொத்து மதிப்பில் நிமிடத்துக்கு ரூ.12 கோடி என்ற அளவில், 7 மணி நேரத்தில் மொத்தம் ரூ.52 ஆயிரம் கோடியை இழந்துள்ளார்.

இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பில்கேட்சுக்கு அடுத்த இடத்துக்கும் தள்ளப்பட்டார். மேலும், பங்கு சந்தையிலும் 5 சதவீதம் அளவுக்கு பேஸ்புக் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தன.  இணைய சிக்கல்களை கண்காணிக்கும் ‘டவுன்டாடெக்டர்’ வெளியிட்ட அறிக்கையில், ‘பேஸ்புக் போன்ற சமூக வலைதளபக்கங்கள் முடக்கத்தால் 10 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள், ‘சர்வர் டவுன்’ புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *