கிருஷ்ணகிரி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பிரம்ம கமலம்!

கிருஷ்ணகிரியில், இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்திருந்ததைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது.
விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து புதியதாக முளைக்கும் தாவர வகைகளைப் பார்த்திருப்போம். பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வ மலர் வகைத் தாவரத்தின் இலையை வெட்டிவைத்தாலே, புதிதாக முளைத்துவிடும். இலையே மண்ணில் வேர்விட்டு வளர்ந்து, பிறகு தண்டுபோல செயல்படும்.

இலையின் பக்கவாட்டில் சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அதன் கணுக்களில் புதிய மொட்டுகள் உருவாகி மலர்களாய் மலரும். இந்த மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து, ஓரிரு நாள்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவையாகும். இந்த மலர், வெள்ளை நட்சத்திரம் போல ஒரு தட்டு அளவில் மலர்கள் அமைந்திருக்கும்.
இந்த வித்தியாசமான மலர் இமயமலையில் காணக்கூடியது. 

இலையிலிருந்து பூக்கும் இந்த மலர், பிரம்மனின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றுவதுபோல அமைந்திருப்பதால், இதைப் பிரம்ம கமலம் என்று அழைக்கின்றனர். மருத்துவ குணமும் தெய்வீகத் தன்மையும் வாய்ந்த இந்த அதிசய மலரை, அது மலரும் நேரத்தில் கண்டு தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த மலரை தற்போது தமிழகத்திலும் பரவலாக வளர்த்துவருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் 8-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்சார வாரிய ஊழியரான மணி (60) என்பவரது வீட்டில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு, செடியைக் கொண்டுவந்து வைத்துள்ளனர். நேற்று முன்தினம் அந்தச் செடியில் நள்ளிரவு நான்கு பூக்கள் மலர்ந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், அந்த அதிசயப் பூக்களை ஆர்வத்துடன் வந்து பார்த்துச் சென்றனர்.

−விகடன்

Post a Comment

Previous Post Next Post