தொழில் ஐடியா'- வெற்றிப் பாதையை தீர்மானிக்கும் முக்கிய சக்தி

ஐடியாக்களின் சக்தி
புதுயுக தொழில்முனைவுகளின் அடிப்படை ஆதாரம் ஒரு சக்தி வாய்ந்த ஐடியா தான். உங்கள் ஐடியாவின் தனித்தன்மையும் மார்க்கெட்டில் அதன் தாக்கமும் தான் நிறுவனத்தின் மதிப்பையும் ஆயுளையும் தீர்மானிக்கின்றன. முதலீட்டாளர்களும் வாடிக்கையாளர்களும், எந்த அளவுக்கு உங்கள் எண்ணங்களினால் உருவான புதுமையான தொழில் முயற்சியால் கவரப்படுகிறார்கள் என்பது தான் வெற்றிக்கான முதல் அறிகுறி. அறிவுசார் தொழில் யுகத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை போல ஐடியாக்களுக்கும் பெரும் பொருளாதார மதிப்பீடு செய்யப்படுவது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கட்டுரையில் ஐடியாக்களின் ஆளுமைகளைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

ஒரு ஐடியா எப்படி உருவாகிறது?
பொதுவாக நம்மில் பலரும் பிரம்மாதமான ஐடியாக்கள் எல்லாம் அப்துல் கலாம், ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் போன்ற அறிவு ஜீவிகளுக்கு மட்டும் தான் வரும் என்றும் நாமெல்லாம் சாதாரண அறிவு படைத்தவர்கள் என்றும் நமக்கும் ஐடியாக்களுக்கும் வெகு தூரம் என்றும் நினைக்கிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. நம்மை சூழ உள்ள அல்லது நாம் கேள்விப்படும் உலகியல் பிரச்சினைகளையும் தேவைகளையும் ஒரு ஆராய்ச்சிக் கோணத்தில் பார்க்க பழகிக்கொண்டோமானால் அது தான் ஐடியாக்களை உருவாக்குவதற்கான முதல் படி. பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கிய சிந்தனையை தான் ஒரு ஐடியா என்று சொல்லுகிறோம். அத்தகைய தீர்வை எப்படி வித்தியாசமாகவும் ஆற்றல் மிக்கதாகவும் சிந்திக்கிறோமோ அந்த அளவு ஐடியா மதிப்பு மிக்கதாக உருப்பெறுகிறது.
உதாரணமாக 'ரெட்பஸ்' நிறுவனத்தின் ஐடியாவை பாருங்கள். தொலைதூர தனியார் பேருந்துகளை டிராவல் ஏஜெண்டுகளின் அலுவலகங்களை அணுகி டிக்கட்டுகளை பதிவு செய்த காலத்தில் நேர விரையும், அலைச்சல், பேருந்துகளை தேர்வு செய்வதில் சிரமம், சேவையிலிருக்கும் பேருந்துகளின் நேரம் மற்றும் வசதிகளின் விபரம் என்று பல பிரச்சினைகள் பயணிகளுக்கு இருந்தன. ரெட் பஸ் நிறுவனர் இந்த பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்று யோசிக்க ஆரம்பித்த போது தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் இன்றைய இன்டர்நெட் யுகத்தில் இந்த பிரச்சினைக்கான தீர்வை உருவாக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான செயல்பாடுகளில் இறங்கினார். சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னாள் எண்ணூறு கோடிகளுக்கு மேலான மதிப்பில் விற்கப்பட்டது.
இன்னொரு உதாரணம் 'ஓலா'. நகரங்களில் வாடகைக்கார் போக்குவரத்தை அடியோடு மாற்றி விட்டிருக்கிறது இந்த நிறுவனத்தின் ஐடியா. தகவல் தொழில்நுட்பம் சாராத விவசாயம் போன்ற துறைகளிலும் கூட ஹாப்பி ஹென்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆர்கானிக் முட்டை உற்பத்தி மூலமாக சாதனை செய்து வருவதை பார்க்கலாம். பலம் மிக்க ஐடியாவோடு தொழில்நுட்ப சாதகங்களை சமயோசிதமாக இணைக்கும் போது பிரமிக்கத்தக்க தொழில் வாய்ப்புகள் உருவாகின்றன என்றால் அது மிகை அல்ல. மீண்டும் சொல்லுகிறேன் ஒரு பிரச்சினையை அல்லது தேவையை அறிவதும் பின்பு அதை ஆழமாக ஆராய்வதும் தான் ஒரு ஐடியாவை உருவாக்குவற்கான முதல் படி. எனவே நம் கவனத்தை பிரச்சனைகளை தேடுவதில் செலுத்த ஆரம்பிப்போம்.
ஐடியாவும் புத்தாக்கமும்(innovation) ஒன்றா?
ஒரு சிறப்பான முயற்சியை நல்ல ஐடியா அல்லது நல்ல இன்னோவேஷன் என்று ஒரே அர்த்தத்தில் தான் நாம் பாராட்டுகிறோம். ஆனால் புதுயுக தொழில் முனைவோர்கள் இரண்டுக்குமான நுட்பமான வேறுபாடுகளை அறிதல் நல்லது. ஒரு பிரச்சினையை ஆராயும் போது அதை தீர்ப்பதற்கு பல சிந்தனைகள் மனதில் எழும். அவ்வாறு எழுந்த பல சிந்தனைகளை மேலும் ஆராயும் பொது ஒன்றோ இரண்டோ செழுமை பெற்று மனதில் வலுப்பெறும். அந்த நிலையில் அது ஒரு ஐடியா என்று சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அந்த ஐடியாவை செயல் முறை படுத்த முயற்சி எடுக்க வேண்டும். அந்த செயலாக்கம் சில பல அணுகுமுறைகளை கொண்டிருக்கும். குறிப்பிட்ட விளைவை எதிர்பார்த்து பரீட்சிக்கப்படும் அத்தகைய செயலாக்க அணுகு முறைகள் படிப்படியாக வலுப்பெறும். இந்த பரீட்சார்த்தங்களின் வெற்றி பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படும். இப்படி ஒரு பிரச்சினைக்கு தீர்வாக மனதில் எழும் ஒரு ஐடியாவை சீரிய மற்றும் தொடர்ந்த செயலாக்க அணுகுமுறைகள் மூலமாக நல்லதொரு விளைவுக்கு இட்டுச்செல்ல முடியுமானால் அந்த விளைவே ஒரு புத்தாக்கம் அல்லது இன்னோவேஷன் என்று அழைக்கப்படுகிறது. ஆக ஒரு முயற்சியை நல்ல இன்னோவேஷன் என்று சொல்லுவோமானால் அதில் ஒரு தீர்வுக்கான ஐடியா, அந்த ஐடியாவை செம்மையாக செயல் படுத்தல் மற்றும் அந்த செயல்முறையின் மூலமாக நல்ல விளைவை உருவாக்குதல் என்ற மூன்று அம்சங்களும் இருக்க வேண்டும்.
ஒரு இன்னோவேஷன் எப்படி தொழில் வடிவம் பெறுகிறது?
ஒரு இன்னோவேஷன் அல்லது புதுமையான தீர்வு அதனளவில் சிறப்பானதொரு முயற்சியாக கருதப்படலாம். அதன் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் ஆக்கங்கள் (intellectual concepts ) பாராட்டப்படலாம். இவை மட்டுமே அதன் வியாபார வெற்றியையே உறுதி செய்து விடாது. ஒரு புதுமையான தீர்வை (innovative solution ) வெற்றிகரமான தொழில் முனைவாக மாற்றுவது முற்றிலும் வேறான ஒரு முயற்சி. எனக்குத்தெரிந்து அற்புதமான பல இன்னோவேஷன்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றன அல்லது தோல்வியடைந்திருக்கின்றன. உறுதியான வெற்றிக்கு இதுவரை எந்த சூத்திரமும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒரு தொழில் சிந்தனை உருவாக்கம் பெற்றுவிட்டால் அதனை சிறந்த தொழில் முனைப்பாக மாற்ற பல நவீன முறைகள் இன்றைய தொழில் மேலாண்மைத்துறையில் முன்னேற்றம் பெற்று வருகின்றன. ஒரு இன்னோவேஷனை நல்லதொரு நிறுவனமாக மாற்ற முக்கியமாக தொழில் மாதிரி என்று சொல்லப்படும் பிசினஸ் மாடல் என்ற வடிவத்துக்குள் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். இது ஒரு கட்டிடத்துக்கான திட்ட வரைபடம் போன்றது. பிசினஸ் மாடல் என்பது இன்றைய ஸ்டார்ட் அப் உலகில் ஒரு சக்தி மிகுந்த வார்த்தை. இதை எந்த அளவுக்கு ஒரு தொழில் முனைவோர் ஆழமாக புரிந்து தனது தொழில் சிந்தனையை வடிவமைக்கிறாரோ அந்த அளவுக்கு அவரது தொழில் முயற்சி அவரது கட்டுக்குள் இருக்கும் என்பது உண்மை. இந்த பிசினஸ் மாடல் பற்றி வரும் கட்டுரைகளில் விரிவாக பார்ப்போம்.
கட்டுரையாளர்: சிவராஜா இராமநாதன், தலைமை நிர்வாகி, நேட்டிவ்லீட் பவுண்டேஷன் மற்றும் நேட்டிவ் ஏஞ்செல்ஸ் நெட்வொர்க்

Post a Comment

Previous Post Next Post