பெண் தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்கள்!


பல்வேறு அபாயகரமான சூழல்கள் நிறைந்த தொழில்களில் ஆண்களால் மட்டுமே வெற்றிகாண முடியும் என்கிற நிலை தற்போது மாறிவிட்டதாக இன்றைய பெண் தொழில்முனைவோர் பலரும் கருதுகின்றனர்.

பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை வழங்கும் ஷீரோஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸைரீ சாஹால், தொழில் தொடங்கிய ஆரம்பத்தில் பழமைவாத பாலின கருத்துக்களால் பெரும் அவதிக்குள்ளானதாகக் குறிப்பிட்டார். ‘உன்னால் என்ன செய்துவிட முடியும்?’ என்ற ஏளனமான கேள்வியைத் தொடுத்தவர்கள் வியக்கும் வண்ணம், நான் உயர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.
டெட்’ பேச்சாளரான சாஹால் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பற்றி தெரிவிக்கும் ‘ஷீரோஸ்’-ஐ கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கினார்.
‘நான் ஷீரோஸை தொடங்கியபோது, பெரும்பாலானோர் இதனை ஒரு என்.ஜி.ஓ. என்றுதான் நினைத்தனர். காரணம், ஒரு பெண் இதை நிர்வகிப்பது அல்லது பெண்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதற்காக இது செயல்படும் முறை.’
மேலும், பெண் தொழில்முனைவோருக்கென அரசு வகுத்துள்ள கொள்கைகள் பற்றி அவர்கள் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது அவசியம் என தெரிவித்தார். மேன்மேலும், தொழில் செய்ய விரும்பும் பெண்களை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தவும் இதைவிட சிறந்த வழி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாஸ்காமின் ஆய்வில் கடந்த ஆண்டு மட்டும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை நடத்தும் பெண்களின் எண்ணிக்கை ஐம்பது சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். வீட்டு சாதனப் பொருட்களைச் சீர்செய்ய உதவும் டெல்லி நகர ஆன்லைன் போர்ட்டலான ‘ஈசிஃபிக்ஸ்’-ன் நிறுவனர் சைஃபாலி அகர்வால் ஹோலானி, ‘பாலின பாகுபாட்டைக் கருதும் பலரும் இன்னும் வியாபாரங்களில் பெண்கள் சாதிக்க இயலாது என ஆணித்தரமாக நம்புகின்றனர். நமது ஆண் ஆதிக்க சமூகத்தில் ஒரு இருபத்து வயது பெண் தனியாக நின்று வெற்றியடையமுடியும் என படித்த, உயர்பதவியில் உள்ள நபர்கள் கூட ஏற்க மறுக்கின்றனர்’ எனவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
இந்தியாவின் மாநகரங்களில் வாகன நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக கார்களைப் பகிர்ந்து மற்றும் சுயமாக ஓட்டிக்கொள்ள வழிசெய்யும் ‘மைல்ஸ்’ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கியுள்ள சாக்‌ஷி விஜ் கூறுகையில்,‘புதிதாக தொழில்முனைவோர் உருவாக தற்போதைய சூழல் சாதகமாக உள்ளது. ஆகவே, சரியான குழுவுடன் பணிபுரிந்தாலே எதிர்பார்த்த வெற்றியை அடையலாம்’ என்றார். கடந்த 2013-ம் ஆண்டு பதினான்கு கார்களுடன் தொடங்கிய இந்தத் தொழிலை, தற்போது இந்தியா முழுவதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களைக் கொண்டு அவர் நடத்திவருகின்றார். மேலும், ‘பெண் தொழில்முனைவோருக்கு அளிக்கப்படும் ஊக்குவிப்பு மகளிர் மேம்பாட்டை அடைவதற்கான பாதையாக இருக்கும்’ என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
டைம்சேவர்ஸ் என்ற ஸ்டார்ட்- அப் நிறுவனத்தைத் தொடங்கியுள்ள தேபதத்தா உபத்யாயா கூறுகையில், ‘தொழில் தொடங்கும் பெண்ணுக்கு குடும்பத்தின் ஆதரவு இருந்தாலே போதுமானது. மற்றபடி, ஒரு ஸ்டார்ட்- அப்புக்கு சிந்தனை, செயலாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவையே அடிப்படையானது’ என்றார்.
சாஹால் ஸ்டார்ட்- அப் நிறுவனங்களைத் தொடங்கும் பெண்கள் பற்றி குறிப்பிடும்போது, இந்தச் சூழல் பெண்களுக்கு ஏற்றதே என்றார். மேலும், ‘ஒரு தொழில்புரியும் ஆணுக்கு பணம், புகழ் மற்றும் பணியில் திருப்தி போன்றவையே அடிப்படையானது. பெண்ணுக்கும் இவைதான் அத்தியாவசியம். ஆனால், இதன் தலைகீழ் வரிசைதான் பெண்ணின் தேவை. இதனால்தான் பெண்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்றவர்கள் என நான் எண்ணுகின்றேன்’ என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.
சாஹாலின் இந்தக் கருத்திலிருந்து சற்றே மாறுபடுகின்றார் ஹோலானி. ‘பணியில் திருப்தியடைவதற்காக பெண்கள் தொழிலை மேற்கொண்டாலும், பணத்தை ஈட்டுவதுதான் ஒவ்வொரு தொழில்முனைபவரின் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதில், பண விவகாரங்களை சாமர்த்தியமாக கையாள்வதிலும், ரிஸ்க் எடுக்கவும் பெண்கள் தயங்குவதில்லை. ஆகவே, இது தொழில் தொடங்குவதற்கு தகுந்த காலம்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழில்: மூகாம்பிகை தேவி

Post a Comment

Previous Post Next Post