செங்கல்லுக்கு மாற்றாக ஹாலோபிளாக் கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஹாலோபிளாக் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இத்தொழிலில் நல்ல வருமானம் பார்க்கலாம்
தயாரிக்கும் முறை
தேவைப்படும் பொருள்கள்
- ஜல்லி (கால் இஞ்ச் அளவுள்ளது), கிரஷர் மண்(பவுடர் போல் இல்லாமல், குருணை போல் இருக்க வேண்டும்.) சிமென்ட் (ஓபிசி ரகம்). இதை பயன்படுத்தினால் உற்பத்தி செய்த 4 மணி நேரத்தில் காய்ந்து விடும். சிமென்ட் 4 சட்டி (ஒரு மூட்டை), ஜல்லி 9 சட்டி, கிரஷர் மண் 6 சட்டி எடுக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை தயாராக வைத்திருக்க வேண்டும். மிக்ஸர் மெஷினை இயக்கி, அதில் சிமென்ட் ஒரு சட்டி, ஜல்லி 2 சட்டி, கிரஷர் மண் 2 சட்டி, ஒரு வாளி தண்ணீர் ஆகியவற்றை வரிசையாக கொட்ட வேண்டும். மீண்டும் அதே அளவில் தொடர்ந்து கொட்ட வேண்டும்.
- அவை அனைத்தும் கொட்டிய 5 நிமிடத்துக்குள் கலவையாகும். அவற்றை டிராலியில் கொட்டி, டிராலியை ஹைட்ராலிக் மெஷினுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஹைட்ராலிக் மெஷின் நகரும் தன்மை உடையது. அதில் உள்ள ஹாலோபிளாக் அச்சு, தரையில் பதிந்திருக்கும். அச்சுக்குள் கலவையை கொட்டி, அச்சில் உள்ள கலவையை ஏழெட்டு முறை ஹைட்ராலிக் பிரஷர் மூலம் இடித்து நெருக்கினால், ஹாலோபிளாக் கட்டி உருவாகும்.
- ஹாலோபிளாக் கட்டியை பிடித்துள்ள அச்சு, பிடியை விட்டு வெளியேறும். மெஷின் தானாக அடுத்த அச்சு பதிக்க நகர்ந்து கொள்ளும். ஹைட்ராலிக் மெஷினில் ஒவ்வொரு முறையும் 5 கற்கள் தயாராகும். ஹாலோபிளாக் கற்கள் 4 மணி நேரத்தில் காய்ந்து விடும். எனினும் 24 மணி நேரம் அதே இடத்தில் வைத்திருந்து, பின்னர் அவற்றை வேறு இடத்தில் அடுக்கி 7 நாள் 3 வேளை தண்ணீர் ஊற்றி வர வேண்டும். பின்னர் 3 நாள் காயவைத்தால் விற்பனைக்கு தயாராகிவிடும்.
கட்டமைப்பு
15 சென்ட் இடம் (அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம்), போர்வெல் தண்ணீர் வசதி (ரூ.1 லட்சம்), மிக்ஸர் மெஷின் (ரூ.58 ஆயிரம்), ஹைட்ராலிக் பிரசிங் மெஷின்(ரூ.1.45 லட்சம்), டிராலி 2 (ரூ.12 ஆயிரம்), இரும்பு சட்டி 15 (ரூ.1050), 3 அடி அகலம், 45 அடி நீளம் கொண்ட பிளாஸ்டிக் ஷீட் 5 (ரூ.800), 4, 6, 8 ஆகிய இஞ்ச் ஹாலோபிளாக், சாலிட் பிளாக் தயாரிக்க 6 அச்சுகள் (தலா ரூ.18 ஆயிரம் வீதம் ரூ.1.08 லட்சம்). மொத்த முதலீட்டு செலவு ரூ.4.75 லட்சம்.
எங்கு வாங்கலாம்?
ஜல்லி கற்கள், கிரஷர் மண், சிமென்ட் ஆகியவை எளிதில் கிடைக்கும். குறைந்த தூரத்துக்குள் உள்ள இடங்களில் இருந்து வாங்கினால் லாரி போக்குவரத்து செலவு குறையும்.


உற்பத்தி செலவு
இட வாடகை ரூ.5 ஆயிரம், சிறு தொழில் சான்றிதழ் இருந்தால் மின் கட்டணம் குறைவு; அதன்படி மாதத்திற்கு ரூ.500, (வணிக கட்டணப்படி என்றால் ரூ.1000). 4 ஊழியர்களுக்கு கூலி 25 நாளுக்கு ரூ.40 ஆயிரம். 4 பேர் மூலம் மாதம் 20 ஆயிரம் கற்கள் உற்பத்தி செய்யலாம். இதில் 4 இஞ்ச் கற்கள் (13 கிலோ எடை) 10 ஆயிரம் எண்ணிக்கை தயாரிக்க உற்பத்தி செலவு தலா ரூ.14 வீதம் ரூ.1.4 லட்சம், 6 இஞ்ச் கற்கள் (19 கிலோ எடை) 5 ஆயிரம் எண்ணிக்கை தயாரிக்க தலா ரூ.19 வீதம் ரூ.95 ஆயிரம், 8 இஞ்ச் கற்கள் (25 கிலோ எடை) தலா ரூ.23 வீதம் 5 ஆயிரம் எண்ணிக்கை தயாரிக்க ரூ.1.15 லட்சம் செலவாகும். மொத்த உற்பத்தி செலவு மாதத்துக்கு ரூ.3.91 லட்சம். சிமென்ட், ஜல்லி, கிரஷர் மண் விலை நிலவரத்துக்கு ஏற்ப உற்பத்தி செலவு கூடும் அல்லது குறையும். ஓட்டையில்லாமல் முழு கட்டியாக உள்ளவை சாலிட்பிளாக் கற்கள். ஹாலோபிளாக் கற்களை விட எடை அதிகமானவை. அதை தயாரிக்க கூடுதலாக கல் ஒன்றுக்கு ரூ.5 வரை செலவாகும்.
வருவாய்
4 இஞ்ச் ஹாலோபிளாக் கல் (13 கிலோ கொண்டது) குறைந்தபட்சம் ரூ.18க்கும், 6 இஞ்ச் கல் (19 கிலோ) ரூ.23க்கும், 8 இஞ்ச் கல் (25 கிலோ) ரூ.27க்கும் விற்கப்படுகிறது. வருவாய் ரூ.4.3 லட்சம். லாபம் ரூ.39 ஆயிரம். சிமென்ட், ஜல்லி, கிரஷர் மண் விலை ஏற்றத்துக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்கலாம். சிமென்ட் காலி சாக்குகள் மூலம் வருவாய் தலா ரூ.2 வீதம் 325க்கு ரூ.650. மாதம் சராசரியாக ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
ஹாலோ பிளாக் மூலம் குறைந்த செலவில் வெளிப்புற டாய்லெட், காம்பவுண்ட் சுவர், குறைந்த செலவிலான வீடுகள், ஷெட் ஆகியவற்றை கட்டலாம். சாலிட் பிளாக் கற்கள் மூலம், தரமான, உறுதியான வீடுகள் கட்டலாம். விலை குறைவு, கட்டுமானப்பணி எளிது என்பதால், ஹாலோபிளாக்குக்கு கிராக்கி உள்ளது. சுவர் தேவை இல்லை என்று இடித்தால் ஹாலோபிளாக்கை திரும்ப பயன்படுத்த முடிகிறது. இதனால் ஹாலோபிளாக்குக்கு நல்ல கிராக்கி உள்ளது.
மூலதனம்
இந்த தொழிலைத் துவங்க நினைக்கும் ஒருவர் தனது கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை மூலதனமாக போட வேண்டியது வரும். மீதமுள்ள ஒன்பதரை லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.
மானியம்
பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த தொழில் வருவதால் மூன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். மூன்று வருடத்திற்குப் பிறகு நான்காவது ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடன் தொகை ஆறு லட்சம் பிடித்தம் செய்யப்படும்.
ஆட்கள்
முழு உற்பத்தி திறனில் வேலை பார்க்க பத்து நபர்கள் தேவைப்படுவார்கள். நல்ல ஈடுபாட்டுடன் வேலைபார்க்கும் ஒன்பது பேரும், விற்பனை மற்றும் கலெக்ஷன் நிர்வாகம் செய்வதற்கு ஒருவரும் போதுமானது.
இயந்திரம்
இந்த ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரம் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. கோவை, உடுமலைப்பேட்டை பகுதிகளில் வாங்கலாம்.
வார்ப்பு அளவுகள்
கற்கள் மூன்று அளவுகளில் உள்ளன.
4 இஞ்ச், 6 இஞ்ச், 8 இஞ்ச் என்ற அளவுகளில் இருக்கின்றன.
4 இஞ்ச் கற்கள் பாத்ரூம் கட்டுவதற்குப் பயன்படுகிறது. (இதன் நீளம் 15 இஞ்ச், அகலம் 4 இஞ்ச், உயரம் 8 இஞ்ச்)
6 இஞ்ச் கற்கள் ஓட்டு வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 6 இஞ்ச்)
8 இஞ்ச் கற்கள் மாடி வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 8 இஞ்ச்)
சாதகமான விஷயம்
சாதாரணமாக மழைக் காலங்களில் செங்கல் தயாரிக்க முடியாது. காய வைப்பதற்கேற்ப வெயில் இருக்காது என்பதால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செங்கல் தொழில் அடியோடு பாதிக்கப்படும். ஆனால், ஹாலோ பிளாக் தொழிலில் அப்படியான கவலை இல்லை. மழைக் காலங்களில்கூட தயார் செய்ய முடியும். இயந்திரத்திலிருந்து எடுத்த அரை மணி நேரத்திற்குள் இந்த கற்கள் காய்ந்து விடுவதால் மழைக்காலம் என்றாலும் பாதிப்புகள் ஏற்படாது.
ரிஸ்க்
தொடர்ச்சி யான மின்சாரம் தான் இதன் முக்கிய தேவை. மின்தட்டுப்பாடுதான் இந்த தொழிலை வளரவிடாமல் தடுக்கும் முக்கியமான விஷயமாகும். மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைத்தால் நல்ல லாபம்தான்
Tags
சிறுதொழில்