பெண் தொழில்முனைவோருக்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய அம்சங்கள்!

ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் பல பெண் தொழில்முனைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். தங்களுக்கான பெயரும் புகழும் பெற்று வருகிறார்கள். இருந்தும் பணியிடத்தில் பெண்கள் மீதான வெறுப்பு இன்றும் நிலவி வருவது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

இதன் காரணத்தை நாம் அலசுவோம். நான் இந்த ஆணாதிக்க சுற்றுச்சூழலில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய தினசரி பணியிடத்தில் பாலின வேறுபாட்டை நான் உணர்ந்ததில்லை. 'கூமோஃபிரோ.காம்' (ghoomophiro.com) எனும் நிறுவனத்தை நடத்திவருகிறேன். ஒரு ஆண் இந்த நிறுவனத்தை நடத்தினால் எத்தகைய சவால்களை சந்தித்திருப்பாரோ ஏறக்குறைய அதே போன்ற சவால்களைத்தான் நானும் சந்தித்தேன்.
எந்த ஒரு சந்தர்பத்திலும் எனது சாதனைகளுக்கு நான் பெண்ணாக இருப்பது ஒரு முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. சில சமயங்களில் சிலர் உங்களை கேட்கத்தகாத கேள்விகளை கேட்கக்கூடும். இதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகளை உங்களால் சகித்துக்கொள்ள முடியாது என்பதை உங்கள் பதிலிருந்து அவர்கள் உணரவேண்டும். பெண் என்ற ஒரே காரணத்திற்காக தனிப்பட்ட சலுகைகள் அளிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.
என் சக ஊழியர்களிடம் தொடர்ந்து உரையாடியபோது பலர் ஒரே மாதிரியான குணாதிசயங்களை வெளிப்படுத்தியதை கவனித்தேன். அப்படிப்பட்ட நம்மில் பொதுவான குணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. தன்னம்பிக்கை
சுயமதிப்பீடு என்பது ஒவ்வொரு பெண் தொழில்முனைவர்களுக்கும் அவசியமான ஒன்று. நீங்கள் உங்களை நம்பினால் தான் உங்களால் அடுத்தவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக முடியும். கனவுகளை நம்புங்கள். சக பணியாளர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைக்கவும் மரியாதையுடன் நடத்தவும் உங்களது தன்னம்பிக்கைதான் வழிவகுக்கும். மேலும் தன்னம்பிக்கைதான் நிறைய மனிதர்களுடன் ஒருங்கிணையும் பண்பை வளர்க்கும். மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதுதான் ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கான மார்கமாகும்.
2. லட்சியம்
எப்போதும் உயர்ந்த லட்சியத்தோடு இருக்கவேண்டும். இந்தியாவில் பெண்களின் வாழ்க்கை குடும்பம் எனும் வட்டத்தைச் சுற்றியே இருக்கிறது. இதனால் பெண்கள் மிகவும் உயர்ந்த லட்சியத்தை தங்களுக்காக நிர்ணயித்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. குடும்பம் மற்றும் பணியிடம் இரண்டிலும் வெற்றிபெற வேண்டிய சுமை நம் மேல் விழுகிறது. இதை ஒரு சவாலாக நாம் எடுத்துக்கொள்வோம். லட்சியத்துடன் நம் இலக்கை நோக்கி பயணிக்கவேண்டும். ஒருபோதும் சமரசம் கூடாது.
3. பேரார்வம் மற்றும் உறுதி
உங்கள் கனவுகள் மற்றும் லட்சியங்களின் மேல் அதிக ஆர்வம் கொள்ளுங்கள். அது குறித்து சத்தமாக சொல்லுங்கள். விவாதியுங்கள். புரிந்துகொள்ளுங்கள். வியாபாரம் எனும் பயணத்தில் குடும்பம், பொருளாதாரம் போன்ற பல்வேறு தரப்பிலிருந்தும் தடைகளை சந்திக்க நேரிடும். ஆனால் மனம் தளரக்கூடாது. ஒரு விஷயத்தை மனதில் நிறுத்துங்கள். இந்த பயணத்தை நீங்கள் தனியாகத்தான் தொடங்கினீர்கள். வெற்றியும் உங்களைச் சுற்றித்தான் இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யும்போது மகிழ்ச்சியாகவும் அதே சமயம் உறுதியாகவும் இருங்கள். உங்கள் ஆர்வமானது குறிக்கோளுடன் ஒன்றி இருக்கட்டும். அது சின்ன விஷயமாக கூட இருக்கலாம். அடுத்தவர் வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவது கூட உங்களுக்கு மகிழ்ச்சியூட்டக்கூடும்.
4. பணிவு மற்றும் கற்பதில் ஆர்வம்
நாம் எவ்வளவு பணிவாக நடந்துகொள்கிறோமோ அவ்வளவு வெற்றிபெறுவோம். “நீங்கள் அமைதியாக உழைத்தீர்களானால், உங்கள் வெற்றி உரத்த கோஷமிடும்” என்கிறது ஒரு பழமொழி. தொழில்முனைவில் ஒவ்வொரு நாளும் நீங்கள் கற்பதற்கும் முன்னேறுவதற்குமான வாய்ப்புகள் குவிந்திருக்கிறது. ஒருவர் தம்மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கை வைப்பதும் சரியல்ல. இதனால் அவர் கற்பது நின்றுவிடும். உங்கள் அறிவை மேம்படுத்திக்கொண்டே இருப்பதுதான் சிறந்தது. விமர்சனங்களை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
5. கடின உழைப்பு
ஒவ்வொருவருக்கும் கடின உழைப்புதான் தாரக மந்திரம். தினசரி வேலைகளை முக்கியத்துவத்திற்கேற்ப முன்னுரிமை அளியுங்கள். நேரத்தை சரியான முறையில் செலவிடுங்கள். இது உங்கள் நிறுவனம். இதனை உயர்த்த உங்களால் மட்டும்தான் முடியும். எந்த ஒரு தொழிலும் தொடங்கும்போது சற்று கடினமாகத்தான் தோன்றும். உயர்ந்த லட்சியத்தை நோக்கிய கடின உழைப்புதான் வெற்றிக்கான வழியாகும்.
உங்கள் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துவதே உங்கள் குறிக்கோளாக இருக்கவேண்டும். சில நேரங்களில் நாம் சோர்ந்து மனம் தளர நேரிடும். அது போன்ற நேரங்களில் உங்கள் சாதனைகளை நினைத்துப்பாருங்கள். அப்போதுதான் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறனும் தீர்வும் தன்னிச்சையாக வரும். புதிய எண்ணங்களுடன் கூடிய உரையாடல்கள்தான் வெற்றியை எளிதாக்கும்.
இக்கட்டுரையின் ஆசிரியர்: பிராச்சி கார்க், 20 தொழில்முனைவோரின் பயணம் குறித்த நூலான “சூப்பர்வுமன்” புத்தகத்தின் ஆசிரியர். முதலில் “மேனேஜிங் மைண்ட்ஸ்” எனும் நிறுவனத்தை தொடங்கி தோல்வி அடைந்தார். பின் கூமோஃபிரோ.காம் எனும் நிறுவனத்தை தொடங்கினார். கார்ப்பரேட்களுக்கும் தனியாக பயணிக்கும் பெண்களுக்கும் பயண ஏற்பாடு செய்கிறார்.

Post a Comment

Previous Post Next Post