ஆயிரம் ரூபாய் போதும் : பைண்டிங்கில் அசத்தலாம்!

ஆண்டு முழுவதும் படிக்கக்கூடிய பாடப்புத்தகங்கள் சிதையாமல் இருக்க பைண்டிங் செய்வது வழக்கமாக உள்ளது. பல்வேறு நிறுவனங்களில் கம்ப்யூட்டர் இருந்தாலும் ஆவணங்களை பாதுகாக்க இன்றும் பைண்டிங் செய்யப்பட்ட லெட்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பைண்டிங் தொழிலுக்கு என்றும் குறையாத வருவாய் உள்ளது. இதில், ஈடுபடுபவர்கள் வீட்டில் இருந்தவாறே ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சுய வேலைவாய்ப்பு பெறுவதோடு, லாபமும் அடையலாம்.

பைண்டிங் மெஷின்கள் இல்லாமல்  ஆயிரம் ரூபாய் முதலீடு இருந்தால்கூட தொழிலை துவக்கிவிட முடியும்.  பைண்டிங் செய்து, அதன் மூலம் வரும் வருவாய் மூலம் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். வீட்டில் இருந்தவாறு சுய தொழில் செய்ய ஏற்ற தொழில் இது. பைண்டிங் செய்வதை ஒரு முறை பார்த்தால் போதும்; எளிதில் கற்றுக்கொள்ளலாம்.
பைண்டிங் செய்வது எப்படி ?
முதலில் பைண்டிங் செய்யப்படும் புத்தகங்களின் அளவுகளை தனித்தனியாக எடுத்து, அதற்கேற்ப அட்டைகள், பிரவுன் ஷீட், மார்பிள் ஷீட், காலிகோ துணியை வெட்டி வைக்க வேண்டும். பைண்டிங் செய்ய வேண்டிய புத்தக முன் அட்டையின் இடது புற மார்ஜின் பகுதியில் தையல் போடுவதற்கு இடம் விட்டு, அதற்கடுத்து ஒரு இஞ்ச் அகலத்தில் மேலிருந்து கீழாக பைண்டிங் பேஸ்ட் தடவ வேண்டும். அதன் மீது 4 பக்கம் கொண்ட டபுள்ஷீட் பிரவுன் பேப்பரை ஒட்ட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புறமும் ஒட்ட வேண்டும். பின்னர் பேஸ்ட் காயும் வரை காத்திருக்க வேண்டும்.
பின்னர் தையல் போட ஒதுக்கப்பட்ட பகுதியில் சம இடைவெளியில் 3 துளைகள் போட அளவெடுக்க வேண்டும். 3 துளைகள் போட உத்தேசித்த இடத்தில், மேல் துளையிலிருந்து கீழ் துளை வரையிலான பகுதியில் பேஸ்ட் தடவி காலிகோ துணியை ஒட்ட வேண்டும். ஒட்டிய துணி காயும் வரை காத்திருக்க வேண்டும். அடுத்து, காலிகோ துணியில் உத்தேசித்த இடத்தில் ஆணியால், சுத்தியல் மூலம் 3 துளை போட வேண்டும். பின்னர் முப்பட்டை ஊசியில், ட்வைன் நூலை கோர்த்து, துளை வழியாக தையல் போட வேண்டும்.
தையல் போடும் போது 3 துளைகளில் புத்தகத்தின் முன்புறமுள்ள கீழ் துளை வழியாக ஊசி நூலை விட்டு பின்புறம் இழுத்து, அதை பின்புற மத்திய துளை வழியாக விட்டு முன்புறம் இழுக்க வேண்டும். அங்கு 2 முனைகளையும் முடிச்சு போட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புற மத்திய துளையின் மேல் பகுதியில் மற்றொரு முடிச்சு போடும் வகையில் தைக்க வேண்டும். இவ்வாறு தையல் போட்டால் இறுக்கமாக இருக்கும். பின்னர் ஏற்கனவே ஒட்டிய பிரவுன் ஷீட்டின் வெளிப்புறம் முழுவதும் பேஸ்ட் தடவி, அதில் பைண்டிங் அட்டையை ஒட்ட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புறத்திலும் செய்ய வேண்டும். ஒட்டிய அட்டை காயும் வரை காத்திருக்க வேண்டும்.
புத்தகத்தில் தைக்கப்பட்ட பகுதியிலும், அதன் மேல், கீழ் பகுதிகளிலும், ஏற்கனவே ஒட்டப்பட்ட அட்டை மீது அரை இஞ்ச் அளவு வரையும் பேஸ்ட் தடவ வேண்டும். அங்கு பேஸ்ட் தடவிய அளவுக்கு வெட்டிய காலிகோ துணியை, ஒட்ட வேண்டும். பின்னர் காய வைக்க வேண்டும். காய வைக்கும்போது முன்புறம் காய்ந்தவுடன், பின்புறம் காயும் வகையில் புத்தகத்தை திருப்பி விட வேண்டும். காய்ந்த பின்னர், அட்டை மீது மார்பிள் ஷீட்டை ஒட்டி அதையும் காய வைக்க வேண்டும். பின்னர் அவற்றை மெஷினில் 3 புறமும் கட்டிங் செய்தால் சீராக இருக்கும். கட்டிங் செய்த புத்தகங்களை அடுக்கி அவற்றின் மீது வெயிட் வைத்தால் பைண்டிங் செய்த புத்தகங்களின் அட்டைகள் வளையாமல் இருக்கும். பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள் தயார்.
தேவைப்படும் பொருட்கள் :
4 வகை ஆணி ,  சுத்தியல் , 3 வகை முப்பட்டை ஊசி ஆகியன மூலப்பொருட்கள். பிரவுன் ஷீட் , பைண்டிங் பேஸ்ட் , காலிகோ துணி , ட்வைன் நூல் , பைண்டிங் அட்டை , மார்பிள் ஷீட் .
சிறிய முதலீட்டின் மூலம் அதிக லாபத்தினை வீட்டில் இருந்தவாறே சம்பாதித்து கொள்ளலாம் . இன்றே முயற்ச்சித்து பார்க்கலாமே !!

Post a Comment

Previous Post Next Post