ஹெர்பல், நேச்சுரல், ஆர்கானிக் – அபாயம்
‘ச்சே… ச்சே… நாங்கள்லாம் புத்திசாலி. ஒன்லி ஹெர்பல், நேச்சுரல், ஆர்கானிக்தான் யூஸ் பண்ணுவோம்’ என்று சொல்வோருக்கு ஒரு விஷயம்… பெரும்பாலான இந்த சமாசாரங்கள் உங்களை வாங்கவைக்கும் உத்தியாக லேபிளில் மட்டுமே ஒட்டப்படுகின்றன.

சோடியம் லாரல் சல்பேட் இல்லாத மூலிகை ஷாம்புகள் சந்தையில் மிக அரிது. ‘கொஞ்சம் மூலிகை; கொஞ்சம் கெமிக்கல்’ என்ற கலவைகள்தான் அதிகம். சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் CERTECH எனும் அமைப்பு ஆர்கானிக் என உலகில் விற்கப்படும் அழகூட்டிகளில் 10 சதவிகித மூலப்பொருட்கள் மட்டுமே ஆர்கானிக் என்கிறது.குழந்தைகளுக்கு என விற்கப்படும் ஆர்கானிக் நேச்சுரல் அழகூட்டிகளில் 35 சதவிகிதம் கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுவன என தன் அறிக்கையில் கூறுகிறது.காஸ்மெடிக்ஸ் எல்லாம் மேலே பூசுவதற்குத்தானே? உடலுக்கு உள்ளே எப்படிப் போகும்?’ என அலட்சியமாக நினைக்க வேண்டாம். தாலேட் பிளாஸ்டிசைசர்ஸ், பாரபின்கள் (பொருள் கெட்டுப்போகாதிருக்க பெரும்பாலான க்ரீம் கள், ஷாம்புகளில் சேர்க்கப் படும் பிரிசர்வேட்டிவ்) இன்னும் நிறமிகளுக்காகச் சேர்க் கப்படும் நானோ துகள்கள் ஆகியவை உடலுக்குள் உறிஞ்சப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில, குறிப்பாக, மணமூட்டிகளும் சன் ஸ்கிரீனரும், விந்தணுக்களின் எண்ணிக்கையைக்கூடக் குறைக்குமாம். அதிகமாக ஸ்ப்ரே அடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள் இனி கொஞ்சம் ‘உஷாராக’ இருங்கள். இன்னொரு விஷயம்… அதிகம் சன் ஸ்கிரீன் தேய்த்துத் திரியும் நபருக்கு, விட்டமின் டி குறைவும் புற்றுநோய் வரும் வாய்ப்பும் கூடுதல். ‘வெயில்ல போய்க் கருத்துடாதப்பா. இதைக் கொஞ்சம் தேய்ச்சுட்டுப் போ’ என இனி சொல்லாதீர்கள்.

கறுப்பு அழகு.
கருமையை நகைப்பதும் இழிவுபடுத்துவதும் விவரம் தெரியாமல் செய்யும் செயலாகும். குழந்தைப் பருவம் முதலே கறுப்பழகை ரசிக்காமல் பவுடர் போட்டு, க்ரீம் தடவி வளர்ப்பது சிறு வயதிலேயே அந்தக் குழந்தைக்குக் கறுப்பு என்றால் நல்லதில்லையோ என்ற மனோ பாவத்தை வளர்க்கிறது. விளைவு? கறுப்பாக இருக்கிறது என்பதால், உணவில் மிளகைப் பொறுக்கிவைக்கும் குழந்தை (சில பெருசும் கூட), ‘கொஞ்சம் நிறம் கம்மியா இருக்கிறது’ என சிறு தானியங்களை ஒதுக்கிவைப்பதும், ‘இது எப்படி நல்லாயிருக்கும்?’ என உடலுக்கு உறுதியை இனிப்பாகத் தரும் பனங்கருப்பட்டியைத் தூரமாக வைப்பதும்தான் நிகழும். கறுப்பு அழகு மட்டுமல்ல… ஆரோக்கியமும் கூட!

அழகு என்பது வெளித் தோற்றத்தில் அல்ல நண்பர்களே…

கிடைத்த திடீர் கணத்தில் கரம்பற்றி அழுத்தித் தந்த காதலியின் முத்தம், ‘அம்மா! நான் ஊட்டிவிடவா?’ எனக் கேட்கும் குழந்தையின் வாஞ்சை, ‘தலைவலிக்குதாப்பா?’ என்ற உங்கள் கணவரின் கரிசன வார்த்தை, ‘சூடா இருக்கா? எண்ணெய் தேய்த்துக் குளிச்சிக்கோப்பா!’ என்று போனில் விசாரிக்கும் அம்மாவின் அக்கறை… இவைதான் அழகு. இந்த வார்த்தைகளைக் கேட்ட கணத்தில், ஓடிப்போய் கண்ணாடியில் முகம் பாருங்கள்… அங்கே தெரிவதுதான் அழகு. உள்ளக் களிப்பில், உவகை பூசி, மலர்ந்து இருங்கள்… நீங்கள்தாம் அழகன்/அழகி!
dr. சிவராமன்

Post a Comment

Previous Post Next Post