செக்கு எண்ணெய் நல்லது! ஆனால் நீங்கள் வாங்குவது உண்மையிலேயே அதுதானா?

ஆயுள் காக்க ஆயிலில் கவனம்
கடலெண்ணெய் கேட்டு, 'இது நல்லெண்ணெய்தான...’ எனக் கடைக்காரரைக் குழப்பியடிக்கிற வடிவேலு காமெடியை நினைவுப்படுத்துகிறது சமீபத்திய செய்தி. ஏழை மக்கள் அன்றாட பயன்பாட்டுக்கு வாங்கும் சில்லரை சமையல் எண்ணெய்களில் (Loose oil) கலப்படம் அதிகரித்து வருவதை தலைநகர் டெல்லியில் உள்ள நுகர்வோர் அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆயிரத்து 15 சமையல் எண்ணெய்களின் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வில், உணவு பாதுகாப்பும் தரமும் காரணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த மாதிரிகள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பூர்த்தி செய்ய தவறியதோடு, புற்றுநோய், பக்கவாத நோய்கள், கல்லீரல் பாதிப்பு, ஒவ்வாமை மற்றும் மாரடைப்பு போன்றவற்றுக்குக் காரணமாவதையும் கண்டறிந்துள்ளனர்.

கலப்படத்திலிருந்து தப்புவோம்! எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்கிற தேடல் அதிகரித்துள்ள நிலையில், ஆயுர்வேத மருத்துவ உதவிப் பேராசிரியரும் மருத்துவருமான டாக்டர் ஆர்.சிவகுமாரிடம் பேசினோம். “சர்வதேச எண்ணெய் வர்த்தக சந்தையில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இருந்து வருகிறது. கடந்த வருடத்தின் புள்ளி விவரப்படி, இந்தியாவில், நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் அளவில் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிகரித்துவரும் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு உற்பத்தி இல்லை என்பதே உண்மை. இதனால் வெளிநாடுகளிலிருந்து சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது. இறக்குமதி எண்ணெய்களில் ரப்பர் ஆயில், குரூட் ஆயில் போன்ற இதர எண்ணெய்களின் கலப்படம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு.
தவிர, தேங்காய் எண்ணெயில் மெழுகுவர்த்தி, ரப்பர் ஆயில் மற்றும் பாரஃபின் கலந்து விற்பனை செய்யப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் எண்ணெயிலேயே கலப்படம் நடக்கும்போது சில்லரை எண்ணெயில் எந்த அளவுக்குக் கலப்படம் இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. காரணம் கண்டறிய முடியாத பல நோய்களுக்கு இதுபோன்ற உணவுக் கலப்படங்களே மூல காரணியாவது பலருக்கும் தெரிவதில்லை. மற்ற நாடுகளில் குளிர் அழுத்த முறையில் தாவர எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. நம் நாட்டிலோ பெரும்பாலான எண்ணெய் நிறுவனங்கள் வெப்ப அழுத்த (Hot Compression) முறையில் தாவர எண்ணெய்களை தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்கின்றன.
எண்ணெய் வித்துகளை  இயந்திரங்களில் அதிக அழுத்தம் கொடுத்து அரைக்கும்போது வெளிப்படும் வெப்பத்தினால் இயற்கைத் தன்மையை இழக்க நேரிடுகிறது. மரச்செக்கில் இயற்கையாக தயாரிக்கப்படும் எண்ணெய் பார்ப்பதற்கு அடர் நிறத்தில் கசடுகளோடு இருப்பதால், சிலருக்கு இவை பிடிப்பதில்லை. கவர்ச்சியான பேக்கிங்கில், பார்ப்பதற்கு கண்ணாடி போன்று இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வெகுவாக மக்களை கவர்வதைப் பயன்படுத்தி, எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டத் தொடங்கிவிட்டன. மரச்செக்கினால் குளிர் அழுத்த முறையில் எண்ணெய் தயாரிக்கப்படும் போது வெப்பநிலை சமநிலைப்படுத்தப்பட்டு, எண்ணெய் வித்துகளில் இயற்கையாகவே கிடைக்கும் சில நன்மைகள் அழியாமல் காக்கப்படுகின்றன.
கடலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை ‘கடலெண்ணெய்’ என்றும், தேங்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை ‘தேங்காய் எண்ணெய்’ என்றும் சொன்ன நம் முன்னோர், எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை ‘நல்லெண்ணெய்’ என்றார்கள். ஏன் தெரியுமா? நல்லெண்ணெயில் இயற்கையாகவே உள்ள லெசித்தின் (Lecithin) ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. இதயத்துக்கு நல்லது செய்வதால் இதை நல்லெண்ணெய் என்றார்கள். எண்ணெயை பித்தளை பாத்திரங்களில் வைத்து உபயோகிக்கும் வழக்கம் இருந்தது.  பாத்திரங்களில் பத்திரப்படுத்தப்படும் எண்ணெயில் அபார குணங்கள் அப்படியே இருக்கும். இவற்றில் செய்யப்படும் உணவுப்பொருட்களின் சுவையும் மணமும் அதீதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மாறாக, மரச்செக்கில் தயாரிக்கப்படும் எண்ணெயை பாலிதீன் கவர்களில் அடைத்து, அவற்றை வாங்கிச்செல்லும் நாம் திரும்பவும் பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் வைத்து உபயோகிக்கும் போது, சூரிய ஒளி ஊடுருவுவதால் வேதிவினை புரிந்து, அதன் இயற்கை குணங்கள் மாற வாய்ப்புள்ளது’’ என்கிறார் சிவகுமார். இதுபோல சில்லரை முறையில் விற்கப்படும் எண்ணெய் உண்மையில் செக்கிலிருந்து தயாரிக்கப்பட்டதா? கலப்படம் இல்லாதவையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?‘‘இதற்கென ஆய்வகச் சான்று எதுவும் கிடையாது. செக்கில் தயாரித்த எண்ணெய் நுரையுடன் கூடிய மணத்துடனும், அடர் பழுப்பு நிறத்துடனும் சற்று அடர்த்தியாக இருக்கும். மற்ற எண்ணெய் என்றால், வெளிர் பழுப்பு நிறத்தில் கண்ணாடி போன்று அடர்த்தி குறைவாக இருக்கும்.
இதைக் கவனித்து வாங்க வேண்டும். வெளிக்கடைகளிலிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதை மரச்செக்கில் தயாரித்த எண்ணெய் என்று சொல்லி அதிக விலைக்கு விற்பவர்களும் உண்டு. இவ்விஷயத்தில் நுகர்வோர்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நல்ல தரமான இயற்கை அங்காடிகளில் பார்த்து வாங்க வேண்டும்’’ என்று அறிவுறுத்துகிறார். எண்ணெயில் என்ன பார்க்க வேண்டும்? எண்ணெய்களை சில்லரை முறையில் விற்பனை செய்வதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதா?  தேசிய வேளாண் நிறுவன தலைமை அறிவியலாளரான ஜே.சாய்பாபாவிடம் கேட்டோம்.“உணவுப் பாதுகாப்பு சட்டப்படி, சமையல் எண்ணெயை முறைப்படி பேக்கிங் செய்யப்பட்டுதான் விற்கப்பட வேண்டும்.
பாக்கெட் மீது விலை, காலாவதியாகும் நாள், அக்மார்க் முத்திரை, உணவுப் பாதுகாப்புத் துறையின் முத்திரையுடன் கூடிய லைசென்ஸ் எண், எடைஅளவு, எண்ணெயில் உள்ள சத்துகள் பற்றிய தகவல்கள், ‘ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம் இல்லாதது’ என்றெல்லாம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் ஆர்ஜிமோன் ஆயில் பயன்படுத்திய சிலர் ஆக்ராவில் இறந்தனர். அதன் பிறகு, உணவு எண்ணெயாக ஆர்ஜிமோன் ஆயிலை பயன்படுத்த அரசு தடை விதித்தது. ‘ஆர்ஜிமோன் ஆயில் இல்லை’ என எண்ணெய் பாக்கெட்டுகளில் அச்சிடுவதும் கட்டாயமாக்கப்பட்டது.  பாக்கெட் உணவுப் பொருட்களைக் கண்காணிப்பதும், தவறு செய்யும் வணிகர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் எடையளவு சட்டப் பிரிவு, அக்மார்க் தர முத்திரை பிரிவு, உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய 3 துறையினரின் கடமை.
குறிப்பிட்ட சமையல் எண்ணெயைப் பற்றிய  விவரங்களை அச்சடித்து முறையாக பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் போதுதான் அந்த எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்று ஆய்வக சோதனையில் நிரூபிக்கப்பட்டு அந்த மூன்று துறையினரால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.  இதுபோல சில்லரை முறையில் விற்கப்படும் எண்ணெயில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்று நுகர்வோரால் கண்டுபிடிக்க இயலாது. எண்ணெயைப் பொறுத்தவரை 23 வகையான தரநிர்ணயம் உள்ளது. ஒவ்வொரு எண்ணெய்க்கும் தனித்தனியான தரநிர்ணயம் உள்ளது. தரநிர்ணய கோட்பாட்டில் முக்கியமாக அமிலத்தன்மையை எடுத்துக் கொள்கிறோம்.
சுத்திகரிக்கப்படாத எண்ணெயாக இருந்தால் 6 புள்ளிகள் வரை அமிலத்தன்மை உள்ள எண்ணெயை உண்ணத்தகுந்த எண்ணெயாக வரையறுக்கிறோம். 6 புள்ளிகளுக்கு மேல் அமிலத்தன்மை உள்ள எண்ணெய் உண்ணத் தகாதது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயாக இருக்கும் பட்சத்தில் அதன் அமிலத்தன்மை 0.5க்கு மேல் கண்டிப்பாக இருக்கக்கூடாது” என்கிறார் சாய்பாபா. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் என்பதை ஆய்வகங்களில் கண்டறிய முடியாது
என்பதையும் அழுத்திச் சொல்கிறார் அவர்.
"அதற்கான ஆய்வுகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. மரச்செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை சில்லரையில் விற்பனை செய்யும் கடைகளில், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்போது இயற்கை விவசாய முறையில் உற்பத்தியாகும் பொருட்களின் மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்து வரும் வேளையில், இதற்கான தரக்கட்டுப்பாடு மேம்பாட்டில் அரசு தீவிர  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எவ்வகை எண்ணெயாக இருந்தாலும் நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தினால், எண்ணெயில் காரல் அதிகரித்துவிடும். காரல் தன்மை உள்ள எண்ணெயில் செய்த உணவை உண்ணும்போது ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படலாம்” என்றும் எச்சரிக்கிறார் சாய்பாபா

Post a Comment

Previous Post Next Post