பெண்கள் சாதனையாளராக மாற தகர்த்தெறிய வேண்டிய 10 நம்பிக்கைகள்!

பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். கடுமையாக உழைத்து பலர் சொந்தமாக தொழில் தொடங்கி திறம்பட நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்பை யாரும் பாராட்டுவதில்லை. பெண்கள் தொழில் தொடங்க காரணம் என்ன? குடும்ப சூழ்நிலை மற்றும் நிர்பந்தம் காரணமாக சிலர் தொழில் தொடங்குவர். சிலர் தங்களது குலத்தொழிலை தொடர்வார்கள். ஆனால் வெகு சிலரே புதிதாக தொழில் தொடங்கி பெரிய நிறுவனமாக மாற்றுகிறார்கள். இவ்வாறு உலகையே திரும்பிப்பார்க்கவைத்தவர்கள் ஷானாஸ் ஹுசைன் மற்றும் கிரண் மசும்தார் ஷா. உலகளவில் பிரபலமடைந்த பெண்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். ஏன்?
புதிதாக தொழில் தொடங்கி அதை சிறப்பாக நடத்துவதற்கு தடையாக இருப்பது எது? அவர்கள் திறமைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கப்படாதது எதனால்?

இந்தியா ஒரு ஆணாதிக்க சமுதாயமாக இருந்தது. பெண்கள் வெளியில் செல்வதுகூட தவறாக கருதப்பட்டது. ஆனால் இன்றைய பெண்கள் கல்வியில் முதலிடத்தில் இருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியில் சேர்கிறார்கள். முக்கிய பதவி வகிக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஆண் பெண் என்ற பாகுபாடு அவசியமில்லை. இதுதான் பெண் சாதனையாளர்கள் பலரது கூற்று. அவர்கள் முன்னேற்றத்திற்கு திறமையும், மன உறுதியும் விடாமுயற்சியும்தான் காரணம்.
நான் ஒரு ஆணாதிக்க பிஹாரி குலத்தில் பிறந்து ஆணாதிக்கம் நிறைந்த முதலீட்டு வங்கியில் பணிபுரிந்தேன். பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கினேன்.
பெண்கள் சூழ்நிலை கைதிகளாகிறார்கள். அவர்கள் சரியான முடிவெடுக்கவேண்டும். துணிந்து தொழில்முனைவில் ஈடுபட்டு சாதனையாளராக மாற வழிவழியாக பின்பற்றி வந்த பல நம்பிக்கைகளை தகர்த்தெறிய வேண்டும். அவ்வாறான பத்து நம்பிக்கைகளை இப்போது பார்ப்போம்.
குடும்ப நிர்வாகமும் குழந்தைகளை பராமதிப்பதும்தான் முக்கிய கடமை :குடும்பத்தை நிர்வாகிப்பதும் குழந்தைகளை கவனிப்பதும் பெண்களுக்கு மட்டுமேயான கடமையில்லை. கணவன் மனைவி இருவரும் கடமைகளை பகிர்ந்துகொள்ளவேண்டும். பெண்கள் குடும்பப்பொறுப்பிற்கு முக்கியத்தும் தரவேண்டியது அவசியம்தான். அதற்காக பணி நிமித்தமாக பயணம் செல்ல நேர்ந்தாலும் குற்ற உணர்ச்சியடைய வேண்டிய அவசியமில்லை. பணிபுரியும் தாய்மார்களின் குழந்தைகள் சுயமாக முடிவெடுப்பார்கள். தேவைகளை தாங்களே பூர்த்திசெய்துகொள்வார்கள். இது ஒரு சிறந்த குணாதிசயமாகும். நீங்கள் உங்கள் துறையில் சிறந்து விளங்கினால் உங்கள் குழந்தைக்கு முன்மாதிரியாக விளங்குவீர்கள். குடும்பத்தையும் பணியிடத்தையும் சரியானபடி சமன்படுத்துவதற்கு ஏற்றவாறு உங்களது வேலைகளை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
என் கணவரின் பணிதான் முக்கியம் :வேலையாகட்டும் சொந்த தொழிலாகட்டும். கணவன் மனைவி இருவரின் வேலையும் முக்கியம்தான். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது. பணி சார்ந்த அக்கரையும் ஈடுபாடும் இருக்கவேண்டும்.
பணத்திற்காக தொழில் தொடங்கவில்லை :தொழில் தொடங்குபவர்கள் தொலை நோக்குபார்வையுடன் இருக்கவேண்டும். வெற்றிநோக்கி நகர தலைவர்தான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிநடத்தவேண்டும். தொழில் வெற்றியை மதிப்பிட பணம்தான் ஒரு அளவுகோல். ஒரு தொழில் தொடங்கி அதன் மூலம் நீங்கள் பணத்தை ஈட்டவில்லையெனில், அது உங்களை உடலளவிலும் மனதளவிலும் சோர்வடையச்செய்யும். நாம் மேற்கொள்ளும் தொழில் எவ்வளவு லாபத்தை தரும் என்றும் எப்படி செய்யவேண்டும் என்றும் பெண்கள் திட்டமிடுவது அவசியம்.
என்னால் பெரிய நிறுவனத்தை உருவாக்கமுடியாது : எந்த ஒரு தொழிலும் சிறிய அளவில் ஆரம்பித்துதான் பெரிய நிறுவனமாக வளரும். இலக்கை நோக்கிய லட்சியம் இருந்தால் போதும். பெரிதாக பணத்தை ஈட்டமுடியாது, நிறைய பணியாட்களை வேலைக்கு நியமிக்கமுடியாது போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிக பெண்களிடம் காணப்படுகிறது. இக்காரணத்தினால் பெண்கள் தாங்களே கையாளும் அளவிற்கு மட்டும் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். பெரிதாக பணத்தை ஈட்டுவது என்பது சற்றே கடினம்தான் என்றாலும் முடியாததல்ல. இந்த அவநம்பிக்கைகளை பெண்கள் தூக்கியெறிந்தால் போதும். பணத்தை பன்மடங்காக பெருக்குவதற்கான வழிமுறைகள் கிடைக்கும். ஊழியர்களை பணியிலமர்த்தி அவர்கள் உதவியுடன் தங்கள் லட்சியத்தை அடையமுடியும்.
விற்பனை செய்யமுடியாது : தொழிலின் முக்கிய அங்கம் விற்பனை. வாடிக்கையாளர்கள் வருவது நின்றுவிட்டால் தொழில் இல்லை. விற்பனையில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.உங்கள் கல்லூரிநாட்களை நினைத்துப்பாருங்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு புது மொபைல் வாங்குவதற்காகவோ அல்லது நண்பர்களுடன் வெளியே செல்வதற்கோ உங்கள் பெற்றோரை சம்மதிக்கவைத்திருப்பீர்கள் அல்லவா? அதுதான் விற்பனை. பயமின்றி வாடிக்கையாளர்களுடன் உரையாடுங்கள். எல்லோருக்குள்ளும் விற்பனைத்திறன் உண்டு. உங்களால் நிச்சயம் முடியும்.
மக்களுடன் ஒருங்கிணைவது நல்ல பண்பல்ல : தொழில் சம்பந்தப்பட்ட மக்களுடன் ஒருங்கிணைவது என்றதும் பெண்களுக்கு நினைவிற்கு வருவது இரவு நேர பார்ட்டிக்கு செல்வதும் மது அருந்துவதும்தான். இதற்கு காரணம் சினிமா மற்றும் தொலைக்காட்சி. அதில் அப்படித்தான் சித்தரிக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. தொழில் ரீதியான மக்களுடன் நட்பில் இருப்பது அவசியம். அப்படி இருந்தால்தான் உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அவர்கள் வழிநடத்துவார்கள்.
பயிற்சி வகுப்புகளுக்கு செல்லமுடியாது :உங்கள் சுய முன்னேற்றத்திற்கு நீங்கள் தான் காரணம். பெண்கள் தங்கள் துறைசார்ந்த அறிவை மேம்படுத்திக்கொண்டே இருப்பது அவசியம். எந்த நிலைமையையும் சமாளிக்க இது உதவும். அவ்வாறு அவர்கள் செய்யவில்லையெனில் பல தவறுகள் இழைத்து அதன்மூலம் பல விஷயங்களை தெரிந்துகொள்ள நேரிடும். பணத்தை இழப்பதற்கு பதிலாக, உங்கள் நேரத்தை செலவழித்து புதிய விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
முடியாது என்று சொல்வது கடினம் : பெண் என்பவள் சமூகத்தில் மிகவும் நல்லவளாக, அமைதியானவளாக, அனைத்தையும் ஏற்றுக்கொள்பவளாக தென்படுகிறாள். பெண்களுக்கு தங்களுடைய நேரத்தின் மதிப்பு தெரியவேண்டும். சில நேரங்களில் தேவையற்ற விஷயங்களில் தங்களுடைய நேரத்தை செலவிட நேரிடும். அவ்வாறு செய்வது உங்கள் தொழிலை பாதிக்கும். அந்த சூழ்நிலையில் துணிந்து தைரியமாக “முடியாது” என்று சொல்லவேண்டும். எப்போதும் எல்லோருக்கும் நல்லவராக இருக்கவேண்டிய அவசியமில்லை.
குடும்பத்தின் ஒத்துழைப்பு இன்றி எதுவும் நடக்காது : பெண்கள் பொதுவாக தங்கள் சாதனைக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்புதான் காரணம் என்று சொல்வார்கள். உண்மைதான். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. இருப்பினும் பெண்கள் முன்னேறுவதற்கு அவர்களின் கடும் உழைப்பும் விடாமுயற்சியும்தான் காரணம். பெண்கள் தங்களுக்கான அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பெறுவதும் அவசியம். வெற்றியில் தங்களுடைய பங்கை மனதில் நிறுத்தி சுயமதிப்பீட்டை உயர்த்திக் காட்டவேண்டும். ஏனெனில் “விளம்பரம் இல்லையெனில் எதுவும் நடக்காது” என்கிறார் P.T.பர்னம், புகழ்பெற்ற அமெரிக்க சர்கஸ் நிறுவனத்தின் அதிபர்.
பணியை விடுத்து குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் : தொழிலா அல்லது குடும்பமா என்று ஒரு வாய்ப்பு கொடுத்தால் பெண்கள் தங்கள் உழைப்பையும் விடாமுயற்சியையும் கைவிடுவார்கள். இவை இரண்டையும் விடுத்தால் நிச்சயமாக தொழிலில் வெற்றியடையமுடியாது. வாழ்க்கைப்பாதையில் தடங்கல்களையும் முரண்பாடுகளையும் சந்திக்க நேரிடும். அவர்களின் சிந்திக்கும் திறன்தான் தடைகளை எதிர்கொள்ள உதவும். “முயற்சியை கைவிடாதவரை தோல்வி கிடையாது” என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டன். அதுபோல வாழ்க்கையில் சந்திக்கும் தடைகளை கண்டு மனம் கலங்காமல் தெளிவாக முடிவெடுத்தால் வெற்றி நிச்சயம்.
இது போன்ற நம்பிக்கைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகலாம். ஆனால் மேலே குறிபிட்டவை அனைத்தும் பல பெண்களுக்கும் பொருந்தும் பொதுவான நம்பிக்கைகள். இந்த நம்பிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் பெண்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படும். பெரிய தொழிலதிபர்கள் ஆகலாம். அதற்கான திறமை இருக்கிறது. நம்புங்கள். நிச்சயம் முடியும்.
ஆசிரியர் குறிப்பு : சோனாலி சின்ஹா - திறமைகளை வளர்ப்பதில் புதுமைகளை புகுத்தும் நிறுவனமான “சோரிங் ஈகில்ஸ் லேர்னிங்“ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO. முதலீட்டு வங்கியில் 20 வருட அனுபவம் பெற்றவர்.

Post a Comment

Previous Post Next Post