லாஜிஸ்டிக் செலவுகள் குறையும்… மத்திய அரசு உறுதி!

by -53 views

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றத்தால் வாகன ஓட்டிகளும் லாஜிஸ்டிக்ஸ் துறையினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, டீசல் விலை உயர்வால் நெருக்கடியைச் சந்திக்கும் லாஜிஸ்டிக் துறையினர் வேறு வழியில்லாமல் சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சரக்குப் போக்குவரத்துச் சேவையில் லாரி ஓடுவதற்கான செலவில் சுமார் 65 சதவீதம் எரிபொருள் கட்டணமாகும். இது மட்டுமல்லாமல் சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் ஓட்டுநர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளன. இந்நிலையில், சரக்கு போக்குவரத்துக்கான செலவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 சதவீதம் குறைக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சரான பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

”LEADS – Logistics Ease Across Different States 2021” (பல்வேறு மாநிலங்களில் சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதற்கான அறிக்கை 2021) என்ற பெயரில் அறிக்கை ஒன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதை பியூஸ் கோயல் இன்று டெல்லியில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ”இந்த நூற்றாண்டுக்கான நவீன உள்கட்டமைப்பை இதுவரை காணாத வேகத்தில் உருவாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. சமீபத்தில் தொடங்கப்பட்ட பிரதமர் கதிசக்தி மாஸ்டர் திட்டம் நாட்டின் அடுத்த தலைமுறை பல்முனை உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தும்” என்றார்.

கொட்டும் மழை… உங்க பைக்குக்கு ஆபத்து… இன்சூரன்ஸ் எடுத்தாச்சா இல்லையா?
மேலும் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி உள்கட்டமைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அவர் குஜராத் மாநிலத்தில் 13 ஆண்டுகளாக எடுத்த முயற்சிகள் லீட்ஸ் அறிக்கையில் குஜராத் தொடர்ந்து முதலிடத்தில் இருக்க அடித்தளம் அமைத்துள்ளது. நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகம் 2013-14ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 12 கிலோ மீட்டராக இருந்தது. அது 2020-21ஆம் ஆண்டில் 37 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது. இது மூன்று மடங்கு வளர்ச்சியாகும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *