மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் 14 ஆண்டுகளுக்கு பின் தீப்பெட்டி விலை ரூ.2 ஆக உயர்வு: டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது

by -22 views
மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் 14 ஆண்டுகளுக்கு பின் தீப்பெட்டி விலை ரூ.2 ஆக உயர்வு: டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது
மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் 14 ஆண்டுகளுக்கு பின் தீப்பெட்டி விலை ரூ.2 ஆக உயர்வு: டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது

கோவில்பட்டி: மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் 14 ஆண்டுகளுக்கு பிறகு டிச.1 முதல் தீப்பெட்டி விலை ஒரு ரூபாயில் இருந்து 2ஆக உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர், சிவகாசி, குடியாத்தம், காவேரிப்பட்டினம் பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலை, 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலை மற்றும் இவற்றை சார்ந்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவற்றில் 90 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் உற்பத்தியாகும் தீப்பெட்டி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. பாஸ்பரஸ் கிலோ ரூ.410லிருந்து 850ஆகவும், மெழுகு ரூ.62லிருந்து 85ஆகவும், குளோரைட் ரூ.70லிருந்து 82ஆகவும், அட்டை ரூ.42லிருந்து 55ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுதவிர பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்களின் வாடகையும் உயர்ந்து தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தீப்பெட்டி சங்க நிர்வாகிகள் சிவகாசியில் ஆலோசனை நடத்தி டிச.1ம் தேதி முதல் ஒரு தீப்பெட்டி விலையை ரூ.2 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளனர். கடந்த 2007ல் 50 காசாக இருந்த தீப்பெட்டி 1 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு 2 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும்
கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், தீப்பெட்டி தொழில் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். பல மடங்கு உயர்ந்துள்ள மூலப்பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் தீப்பெட்டி விலையை ரூ.2ஆக உயர்த்தியுள்ளோம். இது வருகிற டிச.1 முதல் நடைமுறைக்கு வருகிறது. கொரோனாவால் 2 ஆண்டுகளாக தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த காலங்களில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வங்கியில் வாங்கிய கடன்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *