மாநில அரசின் வாட் வரியை தளர்த்தி பெட்ரோல் விலை குறைப்பில் முதல் இடம் பிடித்தது பஞ்சாப்: டீசலில் லடாக் நம்பர்-1

by -32 views
மாநில அரசின் வாட் வரியை தளர்த்தி பெட்ரோல் விலை குறைப்பில் முதல் இடம் பிடித்தது பஞ்சாப்: டீசலில் லடாக் நம்பர்-1
மாநில அரசின் வாட் வரியை தளர்த்தி பெட்ரோல் விலை குறைப்பில் முதல் இடம் பிடித்தது பஞ்சாப்: டீசலில் லடாக் நம்பர்-1

புதுடெல்லி: மாநில அரசின் வாட் வரியை தளர்த்தி பெட்ரோல் விலை குறைப்பில் பஞ்சாப் முதலிடத்தையும், டீசல் விலை குறைப்பில் லடாக் யூனியன் பிரதேசம் முதல் இடத்தையும் பெற்றுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 4ம் தேதி, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.10ம் கலால் வரி குறைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மாநில அரசுகள் தங்கள் பங்கிற்கு வாட் வரியை குறைத்தன. இதுபோல் 25 மாநிலங்கள் வாட் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டன.

இதன்படி, அதிகபட்சமாக பெட்ரோலுக்கு ரூ.16.02ம், டீசலுக்கு ரூ.19.61ம் குறைக்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் விலை குறைப்பில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசு முதலிடம் பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பைத் தொடர்ந்து, மாநில அரசின் வாட் வரியில் பெட்ரோலுக்கு ரூ.11.27 குறைத்து பஞ்சாப் அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால், அம்மாநிலத்தில் பெட்ரோல் விலையில் மொத்தம் ரூ.16.02 குறைந்தன. அடுத்ததாக உபி அரசு ரூ.6.96ம், குஜராத் ரூ.6.82ம், ஒடிசா ரூ.4.55ம், பீகார் ரூ.3.21ம் குறைத்தன.

டீசலை பொறுத்த வரை லடாக் யூனியன் பிரதேசம் அதிகபட்சமாக ரூ.9.52 வாட் வரியை குறைத்தது. இதனால், அங்கு மொத்தமாக டீசல் ஒரு லிட்டர் விலையில் ரூ.19.61 குறைந்தது. கர்நாடகா 9.30ம், புதுச்சேரி ரூ.9.02ம் குறைத்தன. டீசலுக்கு குறைந்தபட்சமாக உபி, உத்தரகாண்ட், அரியானா மாநில அரசுகள் ரூ.2.04 குறைத்துள்ளன. வரி குறைப்புக்குப் பிறகு அதிகபட்சமாக ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.10க்கும், டீசல் ரூ.95.71க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குறைக்காத மாநிலங்கள்
ஒன்றிய அரசின் கலால் வரி குறைக்கப்பட்ட பிறகு, வாட் வரியை குறைக்காத மாநிலங்கள் பட்டியலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களும், ஆம் ஆத்மி ஆளும் டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கம், இடதுசாரிகள் ஆளும் கேரளா, டிஆர்எஸ் ஆளும் தெலங்கானா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆளும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

முந்திய தமிழக அரசு
ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்புக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் திமுக அரசு பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்து அறிவித்தது. தேர்தலில் அளித்த இந்த வாக்குறுதியை பதவியேற்ற சில நாட்களிலேயே, ஒன்றிய அரசின் உதவியை கூட எதிர்பார்க்காமல், முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *