பொருளாதார வளர்ச்சி… நான்கு ஆண்டுகளில் இலக்கை அடைவோம்!

by -23 views

இந்தியப் பொது விவகாரங்கள் அமைப்பு (PAFI) சார்பாக நடத்தப்பட்ட தேசிய கருத்தரங்கில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக மத்திய பெட்ரோலியம் & வீட்டு வசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியப் பொருளாதாரம் 2024-25 ஆண்டு வாக்கில் 5 லட்சம் கோடி டாலர் இலக்கை அடையும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி கண்டு 10 லட்சம் கோடி டாலர் மதிப்பை இந்தியப் பொருளாதாரம் எட்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புக்குப் பிறகு தற்போது சுகாதாரம், ஏற்றுமதி போன்ற துறைகள் வளர்ச்சிப் பாதைக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. கொரோனா தடுப்பூசித் திட்டத்தால் நாட்டில் இயல்பு நிலையும் திரும்பி வருகிறது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து நுகர்வுத் தேவையும் மேம்பட்டு வருகிறது. இதனால் இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இந்தியா திரும்பியுள்ளதாகப் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. எனவே 5 லட்சம் கோடி டாலர் இலக்கை அடைவது எளிதான ஒன்றுதான் என்று ஹர்தீப் சிங் புரி கூறுகிறார்.

கொரோனாவை வென்ற இந்தியப் பொருளாதாரம்! மெச்சும் உலக வங்கி!
பெட்ரோல் – டீசல் பயன்பாடு தற்போது அதிகரித்து வருவதையும் ஹர்தீப் சிங் புரி சுட்டிக்காட்டியுள்ளார். பெட்ரோல் பயன்பாடு 16 சதவீதமும், டீசல் பயன்பாடு 12 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேபோல, பங்குச் சந்தையில் 2020 மார்ச் மாத வீழ்ச்சிக்குப் பிறகு தற்போது 250 சதவீத வளர்ச்சி ஏற்பட்டு 62,000 புள்ளிகளை எட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதையும் ஹர்தீப் சிங் புரி குறிப்பிட்டார். ஏர் இந்தியா தனியார் மயமாக்கப்படுவது குறித்துப் பேசிய அவர், கொரோனா சமயத்தில் அனைத்து விமான நிறுவனங்களும் தத்தளித்துக் கொண்டிருந்த சூழலில் ஏர் இந்தியா விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பது சாதனைக்குரிய ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *