பெட்ரோலை நெருங்கும் தக்காளி விலை! பொதுமக்கள் ஷாக்!

by -18 views

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட கனமழையால் தக்காளி விநியோகத்தில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இதனால் தேவை அதிகரித்து தக்காளி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துகொண்டிருக்கிறது. சில நகரங்களில் ஒரு கிலோ தக்காளி 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மெட்ரோ நகரங்களிலேயே கொல்கத்தாவில்தான் தக்காளி விலை மிக அதிகமாக உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்னர் தக்காளி விலை இங்கு 62 ரூபாயாக இருந்தது.

சென்னையைப் பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் தக்காளி விலை 65 ரூபாயாக உள்ளது. கோயம்பேடு சந்தை நிலவரப்படி மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி விலை 60 ரூபாயாக உள்ளது. சென்னையில் தக்காளி விலை ஒரு மாதத்துக்கு முன்னர் 20 ரூபாயாக மட்டுமே இருந்தது. மும்பையில் தக்காளி விலை சென்ற மாதம் 15 ரூபாயிலிருந்து 53 ரூபாயாக உயர்ந்துள்ளது. தக்காளிக்கான தேவை, தரம் மற்றும் நகரங்களைப் பொறுத்து அதன் விலை வெவ்வேறாக உள்ளது. ஆனால் பெரும்பாலான நகரங்களில் ஒரே மாதத்தில் தக்காளி விலை மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தக்காளி விலை மீண்டும் உயர்வு!
இதுகுறித்து ஆசாத்பூர் தக்காளி கூட்டமைப்பு தலைவர் அசோக் கௌசிக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “தக்காளி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் பருவகால மழை காரணமாக தக்காளி பயிர் சேதமடைந்துள்ளது. இதனால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவை அதிகரித்து அதனால் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. சில்லறை விற்பனையிலும் மொத்த விற்பனையிலும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது” என்றார்.

சீனாவைத் தொடர்ந்து தக்காளி உற்பத்தியில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ள இந்தியா சுமார் 7.89 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 19.75 மில்லியன் டன் அளவு தக்காளியை உற்பத்தி செய்கிறது. அதாவது ஹெக்டேருக்கு 25.05 டன் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *