பங்குச்சந்தைகள் கடும் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 8.22 லட்சம் கோடி இழப்பு

by -40 views
பங்குச்சந்தைகள் கடும் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 8.22 லட்சம் கோடி இழப்பு
பங்குச்சந்தைகள் கடும் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 8.22 லட்சம் கோடி இழப்பு

மும்பை: பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் 8.22 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகள் காரணமாகவும், தனியார் மய நடவடிக்கைகளாலும், சர்வதேச சந்தை நிலவரங்களாலும் இந்திய பங்குச்சந்தைகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வர்த்தகம் துவங்கியபோது மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 59,710.48 புள்ளிகளாக இருந்தது. அதிகபட்சமாக 59,778.37 புள்ளிகள் வரை உயர்ந்தது. இருப்பினும், குறைந்த பட்சமாக 58,011.92 வரை சரிந்தது. வர்த்தக முடிவில், முந்தைய நாளை விட 1170.12 புள்ளிகள் சரிந்து 58,465.89 ஆக இருந்தது.  இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி, 348.25 புள்ளிகள் சரிந்து 17,416.55 புள்ளிகளாக இருந்தது.

இந்த திடீர் சரிவால் மும்பை பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு 2,69,20,196.99 கோடியில் இருந்து 8,21,666.77 கோடி சரிந்து, 2,60,98,530.22 கோடி ஆனது. பஜாஜ், ரிலையன்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ, டைட்டன் ஆகிய நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 5.74 சதவீதம் வரை சரிந்தன. 30 பங்குகளில் 26 பங்குகளின் மதிப்பு சரிந்தது. ஆஸ்திரேலியாவில் 4வது முறையாக கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியும் இதே போன்று ஊரடங்கு பிறப்பிக்க உத்தேசித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அதிகரிப்பதால், அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது மட்டுமின்றி, பண வீக்கம் அதிகரிக்கலாம் என்ற அச்சம், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவையும் பங்குச்சந்தை சரிவுக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *