நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு நம்பிக்கை!

by -22 views

இந்தியாவில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு என்பது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. மின்சார உற்பத்திக்குத் தேவையான போதிய நிலக்கரி இருப்பில் இல்லை என்பதால் மின் விநியோகத்தில் குறைபாடு ஏற்பட்டு மின் வெட்டு பிரச்சினை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதேபோல, பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கங்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அனல்மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான அளவு நிலக்கரி இருப்பதாக நிலக்கரித் துறை தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தில் இடையூறு எதுவும் ஏற்படாது எனவும் அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி கையிருப்பில் 72 லட்சம் டன் அளவு நிலக்கரி இருப்பதாகவும், இது 4 நாட்களுக்கு போதுமானது கூறப்பட்டுள்ளது. மேலும், கோல் இந்தியா நிறுவனத்திடம் 400 லட்சம் டன்களுக்கு மேல் நிலக்கரி இருப்பு உள்ளதாகவும், அது மின் உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மின்சாரப் பிரச்சினை: நிலக்கரி தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை!
இதுகுறித்து நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி விநியோகம் அனைத்து இடங்களிலிருந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம் உட்பட அனைத்து இடங்களிலிருந்தும் அனல்மின் நிலையங்களுக்கு 2 மில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பை உறுதி செய்ய நிலக்கரி விநியோகம் மேலும் அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதன் உற்பத்தியை அதிகரிக்கவும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டிலிருந்து நிலக்கரி உற்பத்தியை 20 மில்லியன் டன்களாக உயர்த்த என்எல்சி இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஒடிசாவில் உள்ள என்எல்சி நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 2 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 4 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்க நிர்ணயிக்கப்பட்டது. அதை 6 மில்லியன் டன்னாக அதிகரிக்க தற்போது முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *