திரும்பும் பொருளாதார வளர்ச்சி… வெற்றி நடை போடும் இந்தியா!

by -46 views

வீழ்ச்சியின் ஆரம்பம்!

2016ஆம் ஆண்டின் இறுதியில் பணமதிப்பழிப்பு என்ற பெயரில் உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1000 ஆகியவற்றை திடீரென செல்லாதவையாக அறிவித்தது மத்திய மோடி அரசு. அதன் பின்னர் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மாபெரும் வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியது. அந்த வீழ்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த சூழலில், 2017ஆம் ஆண்டில் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதால் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்கே இரண்டு – மூன்று ஆண்டுகள் ஆகின.

சம்பவம் செய்த கொரோனா!

இதுபோன்ற சூழலில் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச அளவில் பெரும் சீரழிவாக எழுந்த கொரோனா வைரஸ் பிரச்சினை இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. பொருளாதார ரீதியாக அப்போது ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக இருந்த இந்தியாவுக்கு கொரோனா பெரும் அடியாக விழுந்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. உற்பத்தி முடங்கியது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை இந்தியா சந்தித்தது. ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமாக 24.4 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்தது.

திரும்பிய இயல்பு நிலை!

கொரோனா உயிரிழப்புகளும், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நீடித்து வந்ததால் உள்நாட்டு உற்பத்தியும் அதைச் சார்ந்த இந்தியப் பொருளாதாரமும் பாதாளத்தை நோக்கிச் சென்றது. அதன் பிறகு மத்திய அரசின் மாபெரும் கொரோனா தடுப்பூசித் திட்டத்தால் உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. சில கட்டுப்பாடுகளுடன் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கின. இந்தியாவும் வீழ்ச்சியிலிருந்து எழுந்து மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. இந்த ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியா 20.1 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது.

வளர்ச்சிப் பாதையில் இந்தியா!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தையும் தாண்டி இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய நிலையை இந்தியா எட்டிப் பிடித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் துறையில் நிலையான மற்றும் வலிமையான வளர்ச்சி இருப்பதாகவும், உற்பத்தித் துறையில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறை வாரியாகக் கிடைக்கும் வருவாயைப் பொறுத்து பொருளாதார வளர்ச்சி எந்த அளவுக்கு தற்போது உயர்ந்துள்ளது என்று பார்க்க முடிவதாக நிதியமைச்சகம் கூறுகிறது. மத்திய நிதியமைச்சகத்தின் இந்த மாதாந்திர அறிக்கை, இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியில் வெற்றி நடை போடத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *