ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு ரூ.40,000 கோடி!

by -91 views

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி முறையில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவிகிதத்தை விடக் குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கும். ஆனால், இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்புக்குப் பிறகு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதில் மத்திய அரசுக்கு சிக்கல் இருந்தது. இதையடுத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பினர். அதன் பின்னர் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்கி வருகிறது. அதன்படி தற்போது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ40,000 கோடியை விடுவித்துள்ளது மத்திய அரசு.

ஜிஎஸ்டி வசூல் எத்தனை கோடி தெரியுமா?
இதற்கு முன்னர் ஜூலை 17ஆம் தேதி ரூ.75,000 கோடியை மத்திய அரசு விடுவித்திருந்தது. இந்த நிதியாண்டில் மட்டும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,15,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க கடன் பெறும் வசதியை சென்ற ஆண்டில் மத்திய அரசு வழங்கியிருந்தது. கடன் ஒப்பந்த அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் வழங்கப்படுகிறது. இதில் 2020-21ம் நிதியாண்டில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *