ஜிஎஸ்டியில் தொடரும் மோசடி… 3 பேர் கைது!

by -29 views

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய மோடி அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த வரி முறையில் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் நான்கு அடுக்குகளின் கீழ் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. தொழில் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்துக்கான ஜிஎஸ்டியை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் வரி செலுத்தாமல் மோசடி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஜிஎஸ்டி தொடர்பான புகார்களும், கோரிக்கைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஜிஎஸ்டியின் கீழ் கூடுதல் வரிக் கடன் சலுகை பெறுவதற்கும், ஜிஎஸ்டி செலுத்தாமல் தப்பிப்பதற்கும், போலியான நிறுவனங்களின் பெயரில் பணம் சம்பாதிப்பதற்கும் பல்வேறு வகையான மோசடிகள் ஜிஎஸ்டியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜிஎஸ்டியை எளிமையாக்கவும், ஜிஎஸ்டி மோசடிகளைக் கட்டுப்படுத்தவும் ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வந்தாலும் மோசடிகள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், தற்போது ஜிஎஸ்டி மோசடியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானாவில், போலி நிறுவனங்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளீட்டுக் வரி கடன் மோசடியில் ஈடுபட்டதற்காக பட்டயக் கணக்காளர் உள்ளிட்ட மூன்று பேரை ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகத்தின் குருகிராம் மண்டல பிரிவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவர் மட்டும் குறைந்தது 13 நிறுவனங்களை உருவாக்கி ரூ.121 கோடி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *