சென்னை வெள்ளம்: இந்தியாவுக்கு உதவும் ஆசிய வங்கி!

by -25 views

சென்னை – கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் வெள்ள பாதுகாப்பு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்தும் இந்திய அரசுக்கு உதவ ஆசிய மேம்பாட்டு வங்கி முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதற்காக ஆசிய மேம்பாட்டு வங்கி 251 மில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் ரஜத் குமார் மிஸ்ரா இந்திய அரசு சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

சமீப காலமாகவே சென்னை கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் உள்ள மக்கள் திடீர் வெள்ளத்தால் அடிக்கடி இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்களது வீடுகளும் உடைமைகளும் நாசமாகி அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு உதவும் வகையில் இந்திய அரசு சார்பாக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிறைய திட்டங்களுக்கு ஏற்கெனவே ஆசிய மேம்பாட்டு வங்கி உதவி வருகிறது.

தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலமாக சென்னை – கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் வாழும் மக்களுக்கான இருப்பிட வசதி மேம்படுத்தித் தரப்படும் எனவும், மழை, வெள்ளம், கடல் மட்டம் உயர்வு, புயலால் ஏற்படும் சேதம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படும் என்று ரஜத் குமார் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவைக் காப்பாற்ற வரும் ஆசிய மேம்பாட்டு வங்கி!
இத்திட்டத்தின் மூலம் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக 588 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படுகின்றன. அதேபோல, ஏற்கெனவே உள்ள 175 கிலோ மீட்டர் தொலைவு மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்படுகின்றன. மேலும், அம்பத்தூர், அரியலூர், கடப்பாக்கம் மற்றும் கொரட்டூர் கால்வாய்களில் 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீர் எடுத்துச் செல்லும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. மழைநீர் நீரேற்று நிலையத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

நிலத்தடி நீர்நிலையை மீட்டெடுத்து, பேரிடர் நிவாரண முகாம்களைச் சீரமைத்து, சாலையோர வடிகால்களில் 23,000 நீர்ப்பிடிப்பு குழிகளை அமைக்கும் பணியும் இத்திட்டத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *