கோவை ஜவுளித் தொழில் முன்னோடி கே.கோவிந்தசாமியின் வெற்றிக் கதை!

by -17 views
கோவை ஜவுளித் தொழில் முன்னோடி கே.கோவிந்தசாமியின் வெற்றிக் கதை!
கோவை ஜவுளித் தொழில் முன்னோடி கே.கோவிந்தசாமியின் வெற்றிக் கதை!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் 1907ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் கே.கோவிந்தசாமி. பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாததால் இவரின் இளைமைக் காலம் மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது. இவரது தந்தை நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருடன் இணைந்து கோவிந்தசாமியும் பணிபுரிந்தார்.

அதன் பிறகு மளிகைக் கடை ஒன்றில் உதவியாளராக வேலைபார்த்தார். எத்தனை நாள்தான் பணியாளராக இருப்பது என்று முடிவெடுத்து தானே ஒரு தொழில் தொடங்க விரும்பினார். 1932ஆம் ஆண்டில் பஞ்சாலை ஒன்றைத் தொடங்கினார். இந்தத் தொழிலைச் சிறப்பாகக் கையாண்ட அவர், பின்னாளில் ஜவுளித் துறையில் பல்வேறு பிரிவுகளில் உற்பத்தி செய்யத் தொடங்கினார். 1992ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி கேஜி குழுமத்தின் சார்பில் பருத்தியிலிருந்து துணி தயாரிக்கும் தொழில் தொடங்கப்பட்டது. இது மிகப் பெரிய அஸ்திவாரமாக அமைந்தது.

கேஜி குழுமத்தின் ஜவுளி உற்பத்தி ஆலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி துணிகள் நாடெங்கிலும் ஜவுளி உற்பத்திக்காக அனுப்பிவைக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டில் ஜவுளி உற்பத்தியில் இந்நிறுவனம் முழு மூச்சுடன் இறங்கியது. உற்பத்தி மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

KG-hospital

ஜவுளித் துறையில் முன்னோடியாகக் களம் இறங்கினாலும் இப்போதும் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஜவுளித் துறை மட்டுமல்லாமல் கல்வித் துறையிலும் கேஜி குழுமம் வெற்றி நடைபோடத் தொடங்கியது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தகவல் மேலாண்மை, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இந்நிறுவனம் கல்விச் சேவை வழங்கி வருகிறது. 1974ஆம் ஆண்டில் மருத்துவ அறக்கட்டளையையும் கோவிந்தசாமி தொடங்கினார்.

kg college

ஜவுளி, கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வெற்றிகரமாக இயங்கிவரும் கேஜி குழுமம் கோவையின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருகிறது. இதற்கு விதை போட்டவர் கே.கோவிந்தசாமிதான்.சிறந்த தொழில்முனைவோராகவும், தொழிலதிபராகவும் மட்டுமல்லாமல் சிறந்த நன்கொடையாளராகவும் கோவிந்தசாமி திகழ்ந்தார். அன்னதான வள்ளல், தர்மவீரர் போன்ற புனைப்பெயர்களால் அழைக்கப்பட்டார். இவரது பெயரில் அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

1995ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி தனது 87ஆவது வயதில் கோவிந்தசாமி இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தினர் கேஜி குழுமத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *