கொரோனாவை வென்ற இந்தியப் பொருளாதாரம்! மெச்சும் உலக வங்கி!

by -16 views

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்தது. இதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாட்டை விதித்தது மத்திய அரசு. இது மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. பொருளாதார வீழ்ச்சியை விட நாட்டு மக்களின் உயிரே முக்கியம் என்று கூறிய மோடி அரசு, கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது. உயிரிழப்புகள் மெல்ல மெல்ல கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியது மத்திய அரசு.

அதன் ஒரு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசித் திட்டம் மிகப் பெரிய அளவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பொருளாதார வளர்ச்சியும் மேம்பட்டு வருகிறது. அதற்குச் சான்றாக, உலக வங்கிய இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அங்கீகரித்துள்ளது. கடந்த வாரம் உலக வங்கி வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த ஆண்டில் இந்தியா 8.3 சதவீதம் வளர்ச்சியடையும் என்று மதிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டில் வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த இந்தியா தற்போது வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது.

திரும்பும் பொருளாதார வளர்ச்சி… வெற்றி நடை போடும் இந்தியா!
இதுகுறித்து உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறுகையில், ”இந்தியர்கள் கொரோனா அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இது துரதிர்ஷ்டவசமானது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட இந்தியா தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்தி அதைச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. குறிப்பாக அமைப்பு சாரா துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்தியா அதிலிருந்து மீண்டு வருகிறது. நாங்கள் அதை வரவேற்கிறோம். வளர்ச்சி இருக்கிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. இதில் இந்தியாவுக்கு சவால் உள்ளது. இந்திய அரசும் அதில் கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *