கார் வாங்குவோருக்கு துரோகம் செய்த தீபாவளி!

by -20 views

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டிய பண்டிகை சீசன் சமயத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். இக்காலத்தில் குறைந்த விலைக்குக் கார் வாங்கலாம். இதற்காகவே காத்திருந்து கார் வாங்குபவர்களும் உண்டு. கார் மட்டுமல்லாமல், பைக், மொபைல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு பண்டிகைக் காலத்தில் சிறப்புச் சலுகை வழங்கப்படும்.

இந்த ஆண்டும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்புச் சலுகைகளை அறிவித்தன. ஆனால் கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டில் சலுகைகள் பெரிய அளவில் இல்லை. அதுவும் கொரோனா பாதிப்புக்குப் பிறகு மக்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி நிலவுவதால் நிறைய சலுகைகளை எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு இப்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஜாட்டோ டைனமிக்ஸ் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில், கார்களுக்கான தள்ளுபடிச் சலுகைகள் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.

எஸ்.யூ.வி வாகனங்கள் பிரிவில் தள்ளுபடிச் சலுகைகள் 47,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகக் குறைந்துள்ளன. அதேபோல, சிறிய ரக கார்கள் பிரிவில் 43,600 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாகச் சரிந்துள்ளது. கார் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் செமி கண்டெக்டர்களுக்கான பற்றாக்குறை காரணமாக சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டதன் விளைவாக அதிக சுமை ஏற்பட்டு சலுகைகளும் குறைந்துள்ளன. நவராத்திரி சிறப்பு விற்பனையிலும் கார்கள் அதிக அளவில் விற்பனையாகவில்லை. அதற்குக் காரணம், வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சலுகைகள் கிடைக்கவில்லை என்பதே!

கார் வாங்க போறிங்களா? ரூ. 53,000 தள்ளுபடி – அதிரடி சலுகை!
ஒரு புறம் சலுகைகள் குறைக்கப்பட்ட நிலையில், மறுபுறம் கார்களின் விலையும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினைக்குப் பிறகு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகனங்களின் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர். போதாத குறைக்கு பண்டிகைக் கால தள்ளுபடிகளும் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு பண்டிகை சீசன் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாகக் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *